வட்டுகோட்டை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் இன்னொரு ஆசிரியருக்கும் தொடர்பு? – கைதானவருக்கு விளக்கமறியல்

பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணித ஆசிரியரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன. அவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்பட்டது. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியதுடன் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கணிதபாட ஆசிரியர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் என வாக்குமூலம் பெறப்பட்ட மூன்று மாணவிகளும் நேற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சோதனைக்குட்படுத்தப்பட்டனர். மருத்துவ அறிக்கையை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்தனர். அதனை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, வட்டுகோட்டையில் இயங்கிய தனியார் கல்வி நிலையத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வதைகளுக்கு வேறு ஒரு ஆசிரியருக்கும் தொடர்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.அந்தத் தகவல் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!