பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகள் தொடர்பில் கருணா அம்மான் வெளியிட்ட முக்கிய தகவல்.

ஆயுதப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி, இராஜதந்திர முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று கூறியபோது, புலிகளின் தலைமைத்துவம் அதனை ஏற்றுக்கொள்ளாமையினால் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியதாக கருணா அம்மன் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

புதிய தலைமுறை நேர்காணலொன்றில் இணைந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

” புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதற்கான காரணத்தைக் கூறும்போது, அந்தக் காலத்தில் நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடனும் மத்தியஸ்தத்துடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அன்று சமஷ்டி குறித்து பேசுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கு ஓர் உடன்படிக்கைக்கு வந்து, அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும்படி தலைமைப் பேச்சாளர் என்டன் பாலசிங்கத்திடம் நான் கூறினேன்.

காரணம், சமாதானம் கொண்டுவரப்பட்டு, ஆயுதப் போராட்டம் ஜனநாயக, அரசியல் வடிவம் பெற வேண்டும் என்பதற்காகவே நான் அவ்வாறு கூறினேன். நான் இராஜதந்திர ரீதியாக கூறியதை தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போதே எமக்கு மத்தியில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அதுவே நான் விலகுவதற்கான காரணமாகவும் அமைந்தது.

கேள்வி: நீங்கள் பணம் மற்றும் வேறு தனிப்பட்ட ஆசைகளின் காரணமாகவே ஆயுதப் போராட்டத்தை விட்டுவிட்டதாக ஒரு சாரார் குற்றம்சாட்டுகின்றனர். இதன் உண்மைத்தன்மை என்ன?

அது தவறான தகவல். அந்தக் காலத்தில் இருந்தவர்களுக்கு அது புரியும். அது முற்றும்முழுதான தவறான விடயம் என்றே நான் கூறுகின்றேன். நான் ஏற்கனவே கூறிய விடயம்தான் இயக்கத்தில் இருந்து பிரிந்து செல்வதற்கான காரணமாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!