‘ரூ.1000’ கையில் கிடைக்கும் வரை எதையும் நம்ப முடியாது..!

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து ஆயிரம் ரூபா தொடர்பில் கதைத்து தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றது. 5 வருடங்களாக ஆயிரம் ரூபா தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. எனவே, அத்தொகை கைகளுக்குக் கிடைக்கும் வரை எந்த அறிவிப்பையும் நம்ப முடியாது” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் வைத்து இன்று (26) அவர் இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில்,

‘2015ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது ஆயிரம் ரூபா குறித்த அறிவிப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே விடுத்தது. ஆனால், அது இன்னும் சாத்தியப்படவில்லை. தற்போது 2020ம் ஆண்டில் இருக்கின்றோம். பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளது. ஆனால், 5 ஆண்டுகள் முடிந்தும் ஆயிரம் ரூபா பற்றியே பேசப்படுகின்றது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைச் சந்தித்து இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என பிரசாரம் செய்கின்றனர். எனவே, எப்போது ஆயிரம் ரூபா கிடைக்கின்றதோ அன்று சந்தோசமாக ஏற்றுக்கொள்கின்றோம்.

தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்குமாறு கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வகித்தவர்கள் இதற்கு முன்னர் அறிவிப்புகளை விடுத்திருந்தாலும், அவ்வாறு நடைபெறவில்லை. எனவே, 22 கம்பனிகளும் முன்வந்து, வழங்கினால்தான் சாத்தியமாகும்.

ஆயிரத்துடன் நின்று விடக்கூடாது. அதற்கு மேல் வருமானம் உழைக்கும் வழிமுறைகளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களை வருமானம் உழைக்கும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்’ – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!