லண்டனில் அடித்து நொறுக்கப்பட்ட பொலிசார் வாகனங்கள்: 2 பொலிசார் கவலைக்கிடம்!

லண்டனில் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக 22 பொலிசார் காயமடைந்துள்ளதுடன், அவர்களின் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பிரித்தானியாவின் Brixton-ல் நேற்றிரவு நடந்த சட்ட விரோத நிகழ்ச்சி குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்த போது, ஏற்பட்ட மோதல் காரணமாக 22 பொலிசார் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான ஸ்னாப் சாட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், பொலிஸ் அதிகாரிகளை மிரட்டுவது போன்றும், அவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்குவது போன்றும் உள்ளது.

பார்ப்பதற்கே அந்த காட்சி பயங்கரமாக உள்ளது. இந்த வீடியோவைக் கண்ட சிலர், ஒரு நபர் ஆயுதம் வைத்து மிரட்டுகிறார், அது ஆபத்தான வாள் என்று குறிப்பிட்டு வருகின்றனர். சுமார் 8 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவின் பின்னணியில் பொலிசாரின் சைலன்ஸ் சவுண்டுகள் கேட்கின்றன. இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், காயமடைந்துள்ள 22 பேரில் 2 பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் பிரிதி படேல், இது ஒரு கேவலமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் மேயர் சாதிக் கான், இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, காவல்துறைக்கு எதிரான வன்முறைகள் பொறுத்துக் கொள்ள முடியாது. கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில், இது போன்ற பெரிய கூட்டங்கள் பொறுப்பற்றவை, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார். பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இப்பகுதியில் ஏற்பட்ட இடையூறு மற்றும் மக்களின் பெரிய கூட்டம் காரணமாக தாங்கள் அழைக்கப்பட்டோம். ஆனால் இங்கு வந்த பின்பு, அவர்கள் நடந்து கொண்ட விதத்தால், சற்று பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதில் இருந்த குழுவினர் பாட்டில்கள் மற்றும் சில பொருட்களை வீசியதால், இதில் இரண்டு அதிகாரிகள் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டியுள்ளதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் மற்றும் பொது ஒழுங்கு குற்றங்களுக்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டங்கள் சட்டவிரோதமானவை, அத்துடன் பொது சுகாதாரத்திற்கும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கும் எதிராக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது, சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கபடுவர் என்று பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!