பிரித்தானியாவில் 6 பேரை கத்தியால் குத்திய அகதியை பற்றி வெளியான அதிர்ச்சி பின்னணி!

கிளாஸ்கோ நகர ஹொட்டலில் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட அகதி குறித்து பல பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கிளாஸ்கோ நகரில் அமைந்துள்ள பார்க் இன் ஹொட்டலில் கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டவர் சூடான் நாட்டவரான பத்ரெதின் அபாத்லா ஆதம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆறு பேர் மீது கொலைவெறித் தாக்குதல் முன்னெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு அதிரவைக்கும் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆதம் எச்சரித்திருந்தார் என கூறப்படுகிறது. ஆதம் மூன்று மாதங்களாக தங்கியிருந்த ஹொட்டல் அறையில் உரத்த சத்தம் மற்றும் சூரிய ஒளி இல்லாததால் கோபமடைந்து காணப்பட்டதாக அவரை அறிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமது அறையில் போதிய வெளிச்சம் இல்லை என்பதை அடிக்கடி புகாராக தெரிவித்து வந்த ஆதம், எஞ்சிய விருந்தினர்கள் அவரை வேண்டுமென்றே கோபமூட்ட முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. அந்த ஹொட்டலில் உரத்த சத்தமிட்டு எஞ்சியவர்களை தொல்லைக்கு உள்ளாக்கும் இருவரை கண்டிப்பாக தாம் கத்தியால் தாக்க இருப்பதாக ஆதம் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆதம் தெரிவித்த தகவல்களை அவரது நண்பரான ஏமனைச் சேர்ந்த சிராஜ் என்பவர் பார்க் இன் ஹொட்டல் நிர்வாகத்திடம் கூறி எச்சரித்துள்ளார். மேலும் சிராஜ் பலமுறை ஆதத்திடம், தாக்குதல் நடத்த வேண்டாம் என கெஞ்சியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை பகல் 9.30 மணியளவில் ஹொட்டல் நிர்வாகத்திடம் சிராஜ் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆதம் தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.

அதில் மூன்று சக புகலிடக் கோரிக்கையாளர்கள், இரு ஹொட்டல் ஊழியர்கள் மற்றும் தடுக்க முயன்ற ஒரு பொலிஸ் அதிகாரியையும் ஆதம் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தையடுத்து பொலிசாரால் ஆதம் சுட்டுக்கொல்லப்பட்டார். கொரோனா பரவலை அடுத்து கடந்த 3 மாதங்களாக பார்க் இன் ஹொட்டல் புகலிடக் கோரிக்கையாளர்களின் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!