ஊரடங்கின் மூலம் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளதாக கூறிய பிரதமர் மோடி!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சரியான நேரத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இந்தியா இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள 80 ஆயிரம் இந்திய வம்சாவளி வைத்தியர்கள் அங்கம் வகிக்கும் இந்திய வம்சாவளி வைத்தியர்கள் சங்கத்தின் மெய்நிகர் கூட்டத்தில் காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா மிகச்சிறப்பாக செயற்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 10 இலட்சம் பேருக்கு 350 பேர் என்ற அளவில் இறப்புவீதம் உள்ளது. இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 600 ஆக இருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை இந்தியாவில் 12இற்கும் குறைவாக இருக்கிறது என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களிடமிருந்து கிடைக்கிற ஆதரவுதான் இதற்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ள பிரதமர், இந்தியாவில் கிராமப்புறங்களைப் பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் தொற்று, தீண்டத்தகாதவையாகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகின் தலைசிறந்த நிபுணர்களின் அச்சங்களையெல்லாம் கடந்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி கண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!