போராட்டக்காரர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அமெரிக்க தம்பதியர்!

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு போலீஸ் அதிகாரியில் பிடியில் இருக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்ற பெயரில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் போலீஸ் துறைக்கு அளிக்கப்படும் நிதியை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதற்கிடையில், மிஸ்சோரி மாநிலத்தில் உள்ள செயின் லூயிஸ் நகர மேயர் ஹுரிசன் போலீஸ் துறைக்கு அளிக்கப்படும் நிதியை குறைக்கவேண்டும் என கூறிய பொதுமக்களின் பெயர்கள், வீட்டு முகவரியை அவர் வெளியிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து 500-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கடந்த திங்கள் கிழமை மேயரின் வீடு நோக்கி செல்ல முற்பட்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள் தனியாருக்கு சொந்தமான பகுதியில் உள்ள தவவை உடைத்துக்கொண்டு வந்தனர். இதனால் அந்த இடத்திற்கு உரிமையாளர்களான மார்க் மற்றும் அவரது மனைவி பேட்ரிகா போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டனர். அந்த தம்பதியினர் இது தனியாருக்கு சொந்தமான பகுதி என்றும் வெளி நபர்கள் அனுமதி இன்றி வரக்கூடாது எனவும் தெரிவித்தனர்.

ஆனாலும், மிரட்டும் பாணியில் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முன்னேறி வந்துகொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த தம்பதியர் தங்கள் வீட்டில் இருந்த துப்பாக்கிகளை கொண்டு வந்து போராட்டக்காரர்களை குறிவைப்பது போன்று மிரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களையும், தம்பதியினரையும் சமாதானம் செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தங்களுக்கு சொந்தமான பகுதிக்குள் நுழைந்ததால் தம்பதிகள் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!