முடக்கப்பட்டது ஜிந்துப்பிட்டி – இந்தியாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா!

இந்தியாவில் இருந்து திரும்பி, ஜிந்துபிட்டி பகுதியில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு நேற்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொழும்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பி, 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர், தொற்று கண்டறியப்படாத நிலையில், வீட்டுக்கு அனுப்பப்பட்டவருக்கே தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,

இவர், ஜிந்துபிட்டியிலுள்ள தனது வீட்டில், மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருந்த போது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பல வாரங்களாக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு வெளியே எவருக்கும் தொற்று கண்டறியப்படாத நிலையில், நேற்று மாலை புதிய தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சுகாதாரத் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எனினும், இது தொடர்பாக, அச்சமடையத் தேவையில்லை என்றும், இது சமூகப் பரவல் இல்லை என்றும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஜிந்துப்பிட்டியில் புதிய தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் பதற்றமடைய வேண்டியதில்லை என்றும், அரசாங்கம் தெரிவித்துள்ளது,

ஜிந்துப்பிட்டிப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நேற்றிரவு அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

123 ஆவது தோட்டம் பகுதி முற்றாக தடை செய்யப்பட்டு, வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள 29 குடும்பங்களைச் சேர்ந்த 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் இராணுவத்தினரால், தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!