அரச படைகளின் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்தக் கோருகிறார் சம்பந்தன்!

வடக்கில் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களைக் குறிவைத்து, அரச படைகள் மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு, ஜனாதிபதியும், தேர்தல்கள் ஆணைக்குழுவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கில் அரச சார்பு கட்சிகளை வெற்றிபெற வைப்பதற்காகவே தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களைப் படையினர் அச்சுறுத்துகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாடாளுமன்றத் தேர்தல் சுதந்திரமாக – நீதியாக நடைபெறுவதற்கு தன்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் அண்மையில் நடத்திய சந்திப்பின்போது உறுதியளித்திருந்தார்.

ஆனால், வடக்கின் நிலைமை மோசமாக இருக்கிறது. இங்கு சுதந்திரமான – நீதியான தேர்தல் நடைபெறுமா என்ற வினா எழுந்துள்ளது.

தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களைக் குறிவைத்து இராணுவத்தினரின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக, ஜனாதிபதி உடன் கவனம் செலுத்த வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரா.சம்பந்தன் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!