கிளிநொச்சி இளைஞனின் மரணத்துக்கு 3 மில்லியன் ரூபா இழப்பீடு கொடுத்து வாயை அடைத்த சீன நிறுவனம்!

கொழும்பில் தாமரைக் கோபுர கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறி வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு மூன்று மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாமரைக் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி, அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் உயர்தர மாணவன் கடந்த எட்டாம் திகதி, தாமரைக் கோபுரத்தின் 16 வது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்தார். தாமரைக் கோபுரத்தில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்த பகுதிக்குள் சென்ற போதே,கீழே வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தாமரைக் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு சீனா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஒப்பந்த நிறுவனங்கள் உயிரிழந்த இளைஞனுக்கு காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு எனபனவாக மூன்று மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளன.

கட்டுமானப் பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே, இந்த சம்பவத்துக்குக் காரணம் என்றும், உரிய இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், மரண விசாரணை நடத்திய அதிகாரி கூறியிருந்தார். இந்த நிலையில், உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முன்னரே, சீன, இலங்கை கட்டுமான நிறுவனங்கள், 3 மில்லியன் ரூபாவைக் கொடுத்து, வறிய குடும்பத்தினரின் வாயை அடைத்துள்ளன என்று கூறப்படுகிறது.

குறித்த பணத்தை உயிரிழந்த நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோரின் பெயரில் நிலையான வைப்பில் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!