அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிக்கு தகுந்த பதிலடி தருவோம்: – சீனா ஆவேசம்

உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமீனியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் டிரம்ப்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் டிரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது கூடுதல் வரி விதித்துள்ளது. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை மீறலான சில தயாரிப்புகளின் மீது இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தக்கபடி பதிலடி தருவோம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்தவாறு அமெரிக்காவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளையும் சீனா முறித்துக் கொள்ள நேரிடும் எனவும் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டெங் ஷுவாங் எச்சரித்துள்ளார். சீனாவின் நன்மைக்கு எதிராக அமெரிக்க அரசு ஒருதலைபட்சமான நடவடிக்கை எடுத்தால், எங்களது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க தேவையான எதிர் நடவடிக்கைகளை நாங்கள் உடனடியாக எடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!