இராணுவத்தினருக்கு 10 வருடங்கள் சிறை!!

மியன்மார் இராணுவத்தினர் 7 பேருக்கு தூர பிரதேசத்தில் கடின உழைப்புடன் 10 வருட சிறைத்தண்டனை’வழங்கப்பட்டுள்ளது.

வடமேற்கு ராக்கெய்ன் மாநிலத்தில் 10 ரோஹிங்கிய முஸ்லிம்களை கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

“கொலைக்கு பங்களிப்பு செய்தமை மற்றும் ஈடுப்பட்டமைக்காக அவர்களுக் கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி மின் ஆங் ஹலாய்ங்கின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

தண்டனை வழங்கப்பட்டவர்களுள் 4 பேர் இராணுவ அதிகாரிகள் மற்றும் 3 இராணுவத்தினர். இவர்களுள் 4 அதிகாரிகள் இராணுவத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டும், ஏனைய 3 இராணுவத்தினரும் இராணுவத்திலிருந்து நிரந்தரமாக பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த படுகொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான சட்ட நடைமுறைகள் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் மியன்மாரில் ராக்கெய்ன் மாநிலத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இராணுவ ஆதரவுடன் கூடிய வன்முறைகளால் சுமார் 7 லட்சம் பேர் தெற்கு பங்களாதேஷ் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!