கோவிட்-19: பொலிவியாவில் தெருக்களிலிருந்து 400 சடலங்கள் மீட்பு – பெரும் அச்சத்தில் மக்கள்!

கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இதுவரை 62 ஆயிரத்து 357 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 2,273 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அங்கு குறைவான அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில், கடந்த 5 நாட்களில் தெருக்கள், வீடுகளில் இருந்து மட்டும் 400க்கும் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய நகரமான சாண்டா குரூஸில் 68 சடலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சாண்டா குரூஸ் பெருநகரப் பகுதியானது பொலிவியாவில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் குறைந்தது 85 சதவீதம் பேர் கொரோனாவால் இறந்திருக்கலாம் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் பரிசோதனை முடிவுகள் வரும் வரை, இவை சந்தேக மரணமாகவே எடுத்துக் கொள்ளப்படும் என பொலிவியா அரசு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!