வெலிக்கடைப் படுகொலைகளின் 37 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 35 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட, 37 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்படுகிறது.

1983 ஜூலை 25 ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் 35 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் ஜெகன் உள்ளிட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான பலர் சிங்களக் காடையர்களால் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து, ஜூலை 27ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கள் மீண்டும் ஒரு திட்டமிட்ட படுகொலை அரங்கேற்றப்பட்டது. முதலாவது படுகொலைகளில் உயிர் தப்பிய 18 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

சிறை அதிகாரிகளின் உதவியுடன் அப்போதைய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

இலங்கைத் தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருந்த போது சிறைச்சாலைகளுக்குள் இரண்டு நாட்களிலும் 53 தமிழ் அரசியல் கைதிகள், படுகொலை செய்யப்பட்டனர்.

படுகொலைகள் தொடர்பாக அப்போது ஆட்சியில் இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கம் எந்த விசாரணைகளையும் நடத்தவோ, குற்றவாளிகளைத் தண்டிக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!