ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி வெடிக்கிறது போராட்டம்

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது பலசேனா அறிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று பௌத்த பிக்குகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து சிறிலங்கா அதிபர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, ஞானசார தேரருக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக சீனிகம தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் சிகல ராவய அமைப்பினர் தேங்காங்களை உடைத்து வழிபாடுகளை நடத்தினர்.

இன்று அவரது விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் விடுவிக்கப்படாவிடின், பௌத்தர்களை வீதியில் இறக்கி போராடுவோம் என்று பொது பலசேனா அமைப்பினர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், விருந்தினர்களை சந்திக்க தொடர்ந்து மறுத்து வருகிறார். நேற்றும் கூட அவர் யாரையும் சந்திக்கவில்லை.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள ஆர் விடுதியில், 14 கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார் ஞானசார தேரர். சனிக்கிழமை இரவு அவர் ஏனைய கைதிகளுக்கு தம்ம உபதேசம் செய்தார்.

அவருக்கு கடினமான வேலைகள் அளிக்கப்படுவதில் இருந்தும், சிறைச்சாலை உடை அணிவதில் இருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், ஞானசார தேரருக்கு சிறைச்சாலை உடை வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!