தேர்தலுக்கு எல்லாம் தயார்! – இன்று காலை புறப்படும் வாக்குப் பெட்டிகள்.

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகவுள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவிக்கையில்,

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இம்முறை தேர்தலில் 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 880 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 12,985 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்வுள்ளனர். இந்த வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று (04) இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் 71 மத்திய நிலையங்களுக்கு இந்தப் பெட்டிகள் வழங்கப்படும். அந்த மத்திய நிலையங்களில் இருந்து இன்று காலை எட்டு மணி முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும்.

வாக்காளர்களின் அனைவரினதும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!