சசிகலா விடுதலையாவதில் ஏற்பட்ட புதிய சிக்கல்!

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக அரசின் உள்துறைச் செயலாளராக ரூபா ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டிருப்பதால், குடும்பத்தினர் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் தண்டனை காலம் 2021, பிப்ரவரி 14-ஆம் திகதியோடு முடிவடைகிறது.

ஏற்கனவே இந்த வழக்கில் 21 நாட்கள் சிறையில் இருந்துள்ளதால் அந்த நாட்கள் மட்டும் கழிக்கப்பட்டு ஜனவரி 26-ஆம் திகதி அவர் விடுதலை ஆகலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அவர் மீதுள்ள லஞ்ச குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நன்னடத்தை மீறியதற்காக சில மாதங்கள் அவருக்கு தண்டனை கூடுதலாக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில், சிறையில் சொகுசாக இருப்பதற்காகவும், தேவைப்படும் நேரத்தில் ரகசியமாக ஷாப்பிங் சென்று வருவதற்கும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா ஐ.பி.எஸ். அதிரடி குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.

இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட, சசிகலாவின் 2 கோடி விவகாரம் தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால், இது குறித்து விசாரணைக் கமிஷனை அமைத்தது கர்நாடக அரசு. அதேசமயம், ரூபாவுக்கு ஐ.ஜி. பதவி உயர்வு அளிக்கப்பட்டு இரயில்வே துறைக்கு மாற்றப்பட்டார். இதனால் சசிகலா மீதான குற்றச்சாட்டு அமுங்கி கிடந்தது. இதற்கிடையில் விசாரணை கமிசனின் ரிப்போர்ட் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசிடம் ஒபடைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், தான் கர்நாடக அரசின் உள்துறைச் செயலாளராக ரூபாவை கடந்த வாரம் நியமித்திருக்கிறார் முதல்வர் எடியூரப்பா.

டெல்லியில் இருந்து வந்த உத்தரவின் படியே ரூபாவின் நியமனம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. சசிகலா முன்விடுதலை ஆவார் என அவரது வழக்கறிஞர்களும், குடும்பத்தினரும் சொல்லி வந்த நிலையில், ரூபாவின் நியமனம் சசியின் விடுதலைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. சசிகலாவின் மீது லஞ்ச குற்றசாட்டினை கூறியவர் ரூபா. காவல் துறையையும் சிறைத்துறையையும் உள்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அந்த உள்துறையின் உயரதிகாரியாக ரூபாவே இருப்பதால், சசிகலாவுக்கு எதிரான தனது முந்தைய குற்றச்சாட்டை அவர் மறுத்துப்பேசிட முடியாது.

இதனால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப்படும் வகையில்தான் விசாரணை கமிசனின் அறிக்கை இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அ.தி.மு.க. வழக்கறிஞர்கள். மேலும், சசிகலாவின் விடுதலையை முடக்க நிறைய அரசியல் விவகாரங்கள் மறைமுகமாக நடப்பதாகவும், இதனால் சசிகலாவின் சட்டரீதியிலான விடுதலை கூட கேள்விக்குறியாகும் வழக்கறிஞர்கள் மத்தியில் எதிரொலிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!