கடந்த ஆட்சியாளர்களின் கொள்கை பிரகடனமும் இவ்வாறே இருந்தது – நடைமுறையாகவில்லை!

மக்கள் முகம் கொடுக்கின்ற பொருளாதார பிரச்சினை, அரசியல் தொடர்பான பிரச்சினை என அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டியது அரசாங்கத்தின் கடமையென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (21) பேசும் போது இதனை தெரிவித்தார். மேலும்,

“ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர், தான் ஆட்சியில் இருக்கும் காலம் வரை மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக கொள்கை பிரகடன உரையில் தெரிவித்திருந்தார்.

நேற்று ஜனாதிபதியினால் கூறப்பட்ட கொள்கை பிரகடனத்தை பார்த்தோமேயானால், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புதல், ஒரே நாடு ஒரே சட்டம் உள்ளிட்ட பல்வேறு எண்ணக்கருக்கள் கொண்ட விடயங்கள் அதிகம் காணப்பட்டன.

நாம் நாட்டின் வரலாற்றினை எடுத்துபார்த்தால், இவ்வாறுதான் இதற்கு முற்பட்டவர்களும் மிகவும் சிறப்பான கொள்கை பிரகடனங்களை முன்வைத்திருந்தனர். ஆனால் அவை நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை என்பது கசப்பான உண்மை. அதாவது இதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கத்தின் ஜனாதிபதியும் இவ்வாறானதொரு கொள்கை பிரகடனமொன்றையே முன்வைத்திருந்தார்.

ஆனால், அவர் ஆட்சிபீடமேறிய எட்டு மாதத்தில் கொள்கை பிரகடன விடயத்தில் கூறப்பட்ட விடயம் என்ன, உண்மையான நிலைவரம் என்பதை மக்கள் உணர்ந்துக்கொண்டனர்.

நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளோம். கொரோனா தொற்றினால் அது மேலும் உக்கிரமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு நாம் தற்போது முகம்கொடுத்துள்ள இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு எத்தகைய செயற்றிட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க இருக்கின்றது.

நாட்டில் வறுமை கோட்டில் வாழும் மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு வலுவடைய செய்வது. அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது. டலஸ் அழகப்பெரும கூறியதைப்போன்று வரலாற்றில் யாருக்கும் கிடைத்தாத பெரும்பான்மையை தற்போதைய அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது.

மக்கள் வழங்கிய இந்த ஆணையினால், அரசாங்கம் எந்தவிடயத்துக்கும் பொறுப்பு கூற முடியாமல் இருக்க முடியாது. மக்கள் முகம் கொடுக்கின்ற பொருளாதார பிரச்சினை, அரசியலில் தொடர்பில் முகம்கொடுக்கின்ற பிரச்சினை என அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டியது அரசாங்கத்தின் கடமை” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!