இடைக்கால கணக்கறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்த மஹிந்த ராஜபக்

பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ இடைக்கால கணக்கறிக்கையை இன்றைய தினம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார்.

இதனையடுத்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த பெப்ரவரி மாதத்தில் கடன்களை செலுத்துவதற்கு கோரியிருந்தேன். ஆனால் அன்று எதிர்க்கட்சி அதற்கு இடையூறு செய்தது.

இதனால் தாமதம் ஏற்பட்டது. இந்த பின்னணியில் தான் இன்று 2020ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

2020ஆம் ஆண்டு செப்டெம்பரில் இருந்து டிசம்பர் வரையான நான்கு மாதங்களுக்கு அரசாங்க செலவுகளை செய்வதற்கு 1900 பில்லியன் ஒதுக்குவதற்கும் அதற்காக 1300 பில்லியன் கடன் எல்லையை அங்கீகரிப்பதற்காகத் தான் இந்த குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்த எல்லா குறைநிரப்பு பிரேரணையும் 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டத்தின்மூலம் நாங்கள் எதிர்காலத்தில் சமர்ப்பிப்போம்.

2019ஆம் ஆண்டு செலுத்தப்படாத பட்டியலை செலுத்துவதற்கு பெருமளவு தொகை தேவைப்படுகின்றது. இதன்படி அரசாங்கத்தின் செலவு ஓரளவுக்கு முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்து அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்ட துண்டுவிழும் தொகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி முதலீட்டு மேம்பாட்டை செய்வதற்கு அடிப்படையிலேயே நடவடிக்கை எடுப்போம். அரசாங்கத்தின் செலவைக் குறைத்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பது எமது நம்பிக்கையாக உள்ளது.

நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற அரசாங்கமாக இருக்கின்றோம். தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளாக ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களுக்குள் செய்திருக்கின்றோம்.

இந்த அரசாங்கததை பொறுப்பேற்ற போது குண்டூசியில் இருந்து பெரிய பொருட்கள் வரை எல்லாமே இறக்குமதி செய்யப்பட்டன.

புளி மட்டும் அல்லாது சுதேச கைத்தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலே பத்தி, மஞ்சள், மிளகு கூட இறக்குமதி செய்யப்பட்டன.

பட்டங்கள் வெசாக் கூடுகள் கூட இறக்குமதி செய்யப்பட்டன. இதன்மூலம் உள்நாட்டு கைத்தொழிலாளர்கள் ஊக்கமிழக்கச் செய்யப்பட்டனர்.

கடந்த காலங்களிலே எமது வெளிநாட்டு கையிருப்புக்கள் உண்மையிலேயே தேவையில்லாத பொருட்களை இறக்குமதி செய்வதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த பின்னணியில் எமது செலாவணி விழுக்காடு தேவையற்ற விதத்திலே ஏற்ற இறக்கம் கண்டன. இதன் விளைவை இன்று நாம் பார்க்கின்றோம்.

செலாவணி விழுக்காடை உறுதியான மட்டத்திலே பேணுவதற்கு எங்களால் முடிந்திருக்கின்றது.

எமது உள்நாட்டு தொழில் முனைவோர்கள் கைத்தொழிலாளர்கள் என்று எல்லோரையும் வலுவூட்ட வேண்டியிருக்கின்றது.

அதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்கின்றது. நல்ல புரிதலுடன் பணியாற்றிக்கொண்டிருக்கின்றது.

நல்ல சுபீட்சத்தின் நோக்கு என்கின்ற வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கு இந்த அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு அனைவரிடமும் வேண்டுகொள் விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!