அனுசாவை தூக்கி வீசியது மலையக மக்கள் முன்னணி!

மலையக மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து அனுசா சந்திரசேகரன் வெளியேற்றப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் அறிவித்துள்ளார்.

ஹற்றனிலுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் முன்னணியின் தேசிய சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிதிச் செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் மற்றும் கட்சியின் உயர்மட்ட அங்கத்தவர்களும் தேசிய சபை பொதுச் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய ஏ.லோரன்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், “கட்சியின் உயர்பீடம், தேசிய சபை, பொதுச் சபை ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்ற 245 அங்கத்தவர்களில் 204பேர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் முக்கிய ஐந்து தீர்மானங்களுக்கு ஏகமனதாக தங்களுடைய சம்மதத்தை வழங்கினர்.

இதன்படி, அனுசா சந்திரசேகரன் கட்சியின் யாப்பிற்கு முரணாக செயற்பட்டதன் காரணமாக அவரை அனைத்து பதவிகளில் இருந்தும் வெளியேற்றுவது எனவும் எதிர்வரும் காலத்தில் அனுசா சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியின் கொடியையோ கட்சியின் நிறத்தையோ அல்லது அவர் ஏற்கனவே வகித்த பிரதி பொதுச் செயலாளர் நாயகம் என்ற பதவியையோ எந்த சந்தர்ப்பத்திலும் பாவிக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மலையக மக்கள் முன்னணியின் ஒரு அங்கமாக செயற்பட்ட ஆசிரியர் முன்னணியின் செயலாளராக செயற்பட்ட எஸ்.ரவீந்திரன் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் வெளியேற்றப்படுவதாகவும் மிக விரைவில் புதிய ஆசிரியர் முன்னணி உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!