ஆதரவற்ற குழந்தையின் மீது இரக்கப்பட்ட கனடாவை சேர்ந்த செவிலியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை!

வெளிநாடு ஒன்றில் அநாதரவாக நின்ற குழந்தை ஒன்றின் மீது இரக்கப்பட்ட கனேடிய செவிலியர் ஒருவர் அந்த குழந்தையை தத்தெடுத்துக் கொண்டதால் பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறார். கரீபியன் நாடான ஹெய்தியில் செவிலியராக பணியாற்றி வருபவர் கனேடியரான சாரா வாலேஸ். ஒரு நாள் பணியிலிருக்கும்போது சரியான உணவின்றி ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று அவரது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

யாருமற்ற அந்த குழந்தையை கொஞ்ச நாட்கள் கவனித்து, அது நல்ல ஒரு காப்பகத்தில் சேரும் வரை அதை தன்னுடன் வைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார் சாரா. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அந்த குழந்தையை தன்னால் பிரிய முடியாது என்பது புரியவரவே, அந்த சிறுவனை தத்தெடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் சாரா. இதற்கிடையில் சாராவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அதே நேரத்தில், சிமெண்ட் பை ஒன்றிற்குள் கிடந்த பெண் குழந்தை ஒன்றைக் கண்டு அதையும் சாராவிடம் கொண்டுவந்துள்ளார்கள் சமூக சேவகர்கள். அந்த சிறுமியையும் தத்தெடுக்க முடிவு செய்துள்ளார் சாரா. ஆனால், தத்தெடுப்பது ஒன்றும் ஹெய்தியில் எளிதான விடயமல்ல. அது இழுத்துக்கொண்டே செல்ல, அதற்குள் சாரா மீண்டும் கர்ப்பமாக, வழக்கமாக அவர் செல்லும் மருத்துவமனையில் சில பிரச்சினைகள் இருப்பதால் எப்படியாவது கனடாவுக்கு சென்று பிரசவத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார் சாரா.

ஆனால், அவரது திட்டத்திற்கு வந்துள்ளது ஒரு பெரும் பிரச்சினை. அந்த குழந்தைகளை சாரா தத்தெடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்னமும் முடியாததால், அவர்கள் தற்போதைக்கு அவருக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் இல்லை என்ற முறையில், பிரசவத்திற்காக கனடா திரும்பும் சாரா, குழந்தைகளை கனடாவுக்கு அழைத்து வர கனடா அனுமதியளிக்கவில்லை. சாதாரண நேரமென்றாலாவது பரவாயில்லை, கொரோனா கட்டுப்பாடுகள் வேறு உள்ளதால் கடும் சிக்கலாகிவிட்டது.

எனவே, கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரான Dane Lloydஇன் உதவியை நாடியுள்ளார் சாரா. அவரும், சாராவின் பிரச்சினையை அசாதாரணமான ஒன்றாக கருதி, அதற்கு விதிவிலக்கு அளிக்குமாறு கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவே இல்லை என்று கருதி எல்லைகளை திறந்து விட்டுவிடுவோம் என்று நாங்கள் கூறவில்லை, கொஞ்சம் விதிகளை நெகிழ்த்தி மக்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைவதை உறுதிசெய்வோம், அவ்வளவுதான் என்கிறார் Lloyd.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!