கலைஞர் விருதுகள் தொடர்பில் பிரதமரின் புதிய திட்டம்!

இதுவரை ஒரு குறையாக காணப்பட்ட கலைக்களஞ்சியம் மற்றும் அகராதியை பராமரிக்க தேவையான வசதிகளுடன் கூடிய நிரந்தர அலுவலக கட்டிடம் உடனடியாக வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கலாசார அலுவல்கள் அமைச்சினால் செயல்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யும் போது பிரதமர் இது குறித்து அவதானம் செலுத்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கலைக் களஞ்சியத்தையும், அகராதியையும் பராமரிக்க அலுவலக வசதிகளுடன் கூடிய கட்டிடம் இல்லை என்று அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன முன்வைத்த திட்டங்களை பரிசீலித்த பின்னர், பிரதமர் உடனடியாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீரவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதற்கு நடவடிக்கை எடுத்தார்.

கூட்டத்தின் போது, பிரதமர் ஜோன் டி சில்வா நினைவு அரங்கம் மற்றும் கலைக்கூடம் புனரமைப்பு பணிகள் தொடர்பில் ஆராய்ந்த பிரதமர், ரூபாய் 1600 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஜோன் டி சில்வா நினைவு அரங்கின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகளுக்கு இலங்கை கடற்படை அல்லது இராணுவத்தை ஈடுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதன்போது, கலாசார அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் 2010 தேசிய கலை இலக்கிய விழா குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் நவம்பர் மாதம் சிலாபம் ஆனந்த மத்திய கல்லூரியை மையமாகக் கொண்டு தேசிய கலை விழா நடைபெறுவதுடன், ´தேசநேத்ரு விருதுகள்´ மற்றும் ´மாவட்ட கலைஞர் விருதுகள்´ குறித்து அமைச்சின் அதிகாரிகளால் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இம்முறை ஒரு மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் விருதுகள் அடுத்த முறை முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

நாடு முழுவதும் புதிதாக கட்டப்படும் 19 கலாசார மையங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் திறக்கப்பட வேண்டும் என்றும், தேவையான பணியாளர்களை பொது நிர்வாக அமைச்சுடன் கலந்தாலோசித்து பெற்றுக் கொள்ளுமாறும் பிரதமர் கூறினார்.

ரன்மிஹிதென்ன டெலி சினிமா கிராமம் கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் செயற்படுத்தப்பட்டு வந்ததாக குறித்த சந்தரப்பத்தில் கலந்து கொண்டிருந்த ரன்மிஹிதென்ன டெலி சினிமா கிராமத்தின் தலைவர் சிரேஷ்ட நடிகர் கலாநிதி ரவீந்திர ரண்தெனிய கூறினார்.

தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார, கலாசார அலுவல்கள் அமைச்சின் கூடுதல் செயலாளர் விஜித நந்தகுமார உள்ளிட்ட அதிகாரிகள் பலர் குறித்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!