சர்ச்சைக்குரிய கடற்படைத் தளபதிக்கு ஆதரவாக சுமந்திரனின் கனிஷ்ட சட்டத்தரணி! வெளிவரும் இரகசியம்

கொழும்பில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட 14 கடற்படையினரை எதிரிகளாக பெயர் குறிப்பிடப்பட்டு கொழும்பு விசேட நீதிமன்றத்தில் கடற்படையினருக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது என ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2008ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இந்த 11 இளைஞர்களில் ஐந்து மாணவர்கள் சார்பாக ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன.

இந்த விசாரணையில் கடற்படையினரை 11 இளைஞர்களையும் கடத்தப்படும் வெளிக்கொண்டு வரப்பட்டவை. அடுத்து சட்டமா அதிபர் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உட்பட 14 கடற்படையினருக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிக்கும் மற்றைய எதிரிகளுக்கும் 4 ஜனாதிபதி சட்டத்தரணிகள் உட்பட 75 சிங்கள சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த வழக்கு மேலதிக விசாரணைக்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்த வேளையில் சுமந்திரன் அவர்களே உங்களுடைய கனிஷ்ட சட்டத்தரணி நிரான் அங்கடல் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்கு விசாரணையை இடைநிறுத்த உச்சநீதிமன்றத்தில் ஒரு தடையாணை பெற்று மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையை இடை நிறுத்தியுள்ளார்.

இந்த நிரான் அங்கடல் தமிழரசுக்கட்சியின் சட்ட குழுவில் ஒரு உறுப்பினராகவும் உள்ளார். இந்த செயல்பாட்டினால் காணாமல் போன குடும்பத்திற்கு நீதியையும் நியாயத்தையும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்பொழுது ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட நிசாந்த சில்வா நாட்டைவிட்டு தப்பியோடும் நிலை ஏற்பட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு அறிவுறுத்தல் வழங்கிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக ஆஜராகிய நான் மட்டுமே இப்பொழுது வெளியில் உள்ளேன். எனக்கு என்ன நடக்குமோ? காணாமல்போன உறவுகளுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க முடியாது போய்விட்டாலும் பரவாயில்லை ஆனால் நியாயம் கிடைப்பதை இடைக்கால தடை மூலம் நிறுத்தி வைத்தது யார்? இவ்வாறான செயல்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிவிற்கு முக்கியமான ஒரு காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான இக்கட்டான சூழலில் நான் பல வழக்குகளை செய்கிறேன் என மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!