ஆனந்தசுதாகரை விடுவிக்க முடியாது! – விக்கியிடம் கைவிரித்தார் ஜனாதிபதி

ஆனந்த சுதாகரைப் போன்ற மேலும் பல கைதிகள் இருப்பதனால், அவரை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வடக்கு மாகாண முதலமைச்சர் சந்தித்த போது ஆயுள் தண்டனை கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகளின் நன்மை கருதி அவரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனந்த சுதாகரை போன்ற மேலும் பல கைதிகள் சிறைகளில் இருக்கின்றனர். இவரை விடுவிக்கும் போது மற்றையவர்களும் தங்களை விடுவிக்குமாறு கோர கூடும் என்பதனால் இவரை உடனடியாக விடுவிக்க முடியாதுள்ளதாக முதலமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் ஜனாதிபதிக்கு கோரிக்கையொன்றை விடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்தப் பிள்ளைகளுக்கு தமது தந்தையை பார்வையிடக் கூடியவாறு அவரை அருகிலுள்ள சிறைச்சாலையொன்றுக்கு மாற்ற நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனைச் செய்வதற்கு நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!