ரவிராஜ் படுகொலை தொடர்பில் வெளிவரும் முக்கியத்தகவல்கள்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பாக பொய்யான சாட்சிகளை தயாரிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தலையீடு செய்ததாக கடற்படை புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரி காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் சாட்சியமளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பிரிவு அதிகாரி காமினி செனவிரட்ன ஆணைக்குழுவில் மேலும் சாட்சியமளிககையில் தெரிவித்தவை வருமாறு

சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க 2015 மார்ச் 15ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நான் அழைக்கப்பட்டேன். அங்கு உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அமரவங்ச என்பவர் நடராஜா ரவிராஜை நான் சுட்டதாகவும் அப்போது எனது கையில் காயம் ஏற்பட்டதாகவும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் அதனை நிரூபிப்பதாகவும் கூறி அரச சாட்சியாளராக மாறி வீடு செல்லுமாறு தெரிவித்தார்.

பின்னர் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அமரவங்ச ஒரு சந்தர்ப்பத்தில் நீ இந்த படுகொலையை ஏற்றுக்கொள், இது எனக்கு தலையிடியாகும். ரணில் விக்கிரமசிங்க, ஜோன் அமரதுங்க, எம்.ஏ. சுமந்திரன், சமன் ரத்னபிரிய ஆகியோர் இதுபற்றி தொலைபேசி ஊடாக வினவுவதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக காமினி செனவிரட்ன ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளதா என ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி வினவினார். இதுவரை தன்னிடம் பெற்று கொண்ட இரத்த மாதிரி அறிக்கை கிடைக்கவில்லையென்றும் டீ.என்.ஏ அறிக்கை தனக்கு இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலை பெறுவதற்குள்ள ஒரு சான்று என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் அதனை மறைத்துள்ளதாகவும் செனவிரட்ன மேலும் தெரிவித்தார்.

அத்திணைக்கள அதிகாரிகளுக்கு அடிபணியாமையினால் தன்னை கைது செய்து 22 மாதங்கள் விளக்கமறியலில் வைத்ததாகவும் சாட்சி தெரிவித்தார்.

இதில் 11 மாதங்கள் விடுதலைப்புலிகள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிக்கடை சிறைச்சாலையின் ஐ வோட் சிறைக்கூடத்தில் தன்னை தடுத்து வைத்தாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு செலவுகளுக்காக தனது வீடு உட்பட அனைத்து சொத்துக்களையும் அடகு வைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர மாத்திரம், வழக்கு செலவுகளுக்காக இரண்டு இலட்சம் ரூபாவை தனக்கு வழங்கியதாகவும் சாட்சி ஆணைக்குழுவில் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!