கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ: 10 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இதனிடையே கொரோனாவால் முடங்கியுள்ள கலிபோர்னியா மாகாணத்தை காட்டுத்தீயும் திணறடித்து வருகிறது.

கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மரங்கள் வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது.

அத்துடன் வேகமாக வீசும் காற்றும் தீ பரவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலான காட்டுத்தீ அணைக்கப்பட்டு விட்டாலும் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பட் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக மேலும் 7 பேர் பலியாகினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் காட்டுத் தீயால் நகரை விட்டு வெளியேற பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!