வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க இணைப்பாளரிடம் விசாரணை!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரியிடம் பொலிஸ் தலைமையகத்தில் பெரும் குற்றப்பிரிவினர் சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வருடம் எட்டாம் மாதம் 20ஆம் திகதி யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்றையதினம் 2 மணி முதல் 4.30 மணி வரை சுமார் இரண்டரை மணித்தியாலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்ற இடத்தில் மரியசுரேஷ் ஈஸ்வரி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தங்களுடைய உறவுகளை தேடி போராடி வருகின்ற தாம் மக்கள் அனைவருடைய கருத்துக்களாக ஊடகங்களுக்கு சில கருத்துக்களை தெரிவித்து வருகின்றோம்.

இவ்வாறான கருத்துக்களை கொண்டு எங்களிடம் விசாரணைகளை மேற்கொள்வது பொலிஸ் நிலையங்களுக்கு அழைப்பது இவ்வாறான செயற்பாடுகள் எங்களை அச்சுறுத்துவதாக அமைகின்றது.

எங்களுடைய உறவுகளை தேடி நாம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம். எங்களுடைய உறவுகளை தருவதை விடுத்து இவ்வாறு எங்களை விசாரணைக்கு அழைத்து அச்ச சூழ்நிலைக்குள் தள்ள வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!