நாடுகளின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடாதிருக்க வலியுறுத்தினார் ஜனாதிபதி!

நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதில், ஐக்கிய நாடுகள் சபை முக்கியத்துவம் கொடுக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் நேற்று காணொளி தொடர்பாடல் மூலம் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சில மாதங்களுக்குள் பொருளாதாரங்கள், சுகாதார அமைப்புகள் மற்றும் சமூகங்களைப் பாதித்துள்ளது.

கொரோனா சவாலை இலங்கையால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இலங்கையில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பே கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைக் குழுவை நாங்கள் அமைத்தோம்.

எங்கள் அணுகுமுறை இராணுவம், சுகாதாரம், தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் உள்ள பொதுத்துறை அதிகாரிகளை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் மீட்பு வீதம் உலகளாவிய மீட்பு வீதத்தை விட 90வீதம் அதிகமாக உள்ளது. எங்களின் இந்த வெற்றிக்கு அடையாளப்படுத்தல், தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மிகப்பெரிய பலமாக இருந்தன.

இதேவேளை, நிலையான அபிவிருத்தி நோக்கின் அடிப்படையில் 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை உறுதியளித்துள்ளது. வேளாண் அடிப்படையிலான உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் வறுமையை ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள்.

உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவுவதற்கும் இறக்குமதிகள் மீதான ஓரளவு கட்டுப்பாடுகள் உட்பட இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் ஆரம்பித்த நடவடிக்கைகள் முக்கியம் பெறுகின்றன.

இதேவேளை, ஒரு சிலரின் நலன்களுக்காக எந்த நாடும் பிணைக் கைதிகளாக இல்லாதபோது, உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா.வுக்கும் இடையிலான கூட்டாண்மை மிகச் சிறந்த முறையில் தொடர்கிறது என்பதை நம்புகிறேன்.

உலகம் ஒரு பொதுவான மற்றும் நிகரற்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் எங்களுக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபையானது மாநிலங்களின் இறையாண்மை, சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்பதுடன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இதேவேளை, நாங்கள் விரும்பும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக இந்த மாபெரும் நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்தும் முயற்சிகளில் நாங்கள் எங்களை அர்ப்பணிப்போம்.

அந்தவகையில், அமைதி காக்கும் நடவடிக்கைகள் முதல் அதன் சிறப்பு அமைப்புக்களின் திட்டங்கள் வரை ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அத்துடன், நாங்கள் எங்கள் மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் கடமைப்பட்டிருக்கிறோம்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தனது 75ஆவது ஆண்டு நிறைவை 2020, செப்டம்பர் 21ஆம் திகதி உயர்மட்டக் கூட்டத்துடன் கொண்டாடுவதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் தீர்மானித்திருந்தன.

இதன்படி, ‘பன்முகத்தன்மைக்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துதல்’ என்ற அடிப்படையில், பொதுச் சபையின் 75 ஆவது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர், 180 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் தங்கள் பிரதிநிதித்துவங்களை அளித்த கூட்டத்தில் தொடக்க அறிக்கையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!