பிரித்தானியாவில் தீவிரமடைந்த கொரோனா பரவல்: கடுமையான ஊரடங்கு விதிகளை அறிவிக்கவிருக்கும் போரிஸ் ஜோன்சன்!

பிரித்தானியாவில் கொரோனாவின் பரவல் தீவிரமாகிவிட்டதால், பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாளை கடுமையான ஊரடங்கு விதிகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவில் இனிமேலும் உரிய நடவடிக்கை எடுக்க தாமதித்தால் அக்டோபர் மத்தியில் நாள் ஒன்றுக்கு 50,000 கொரோனா பாதிப்புகள் உறுதியாகும் எனவும், இதனால் நாள் ஒன்றிற்கு 200 மரணங்கள் நிகழ்வதையும் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்றும் அரசின் முக்கிய ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் எச்சரித்திருந்தார்.

மேலும், அவர் தற்போதைய சூழலில் ஒவ்வொரு ஏழு நாட்களிலும் தொற்றுநோய் இரட்டிப்பாகிறது. இதனால் நவம்பர் மத்தியப்பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 200 மரணங்களை எதிர்பார்க்கலாம், இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் துரித நடவடிக்கை தேவை என்று கூறியிருந்தார். இதையடுத்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாளை காலை, கொரோனாவின் புதிய விதிமுறைகள் குறித்து பேசுவார் என்றும், அதில் கடுமையான ஊரடங்கு விதிகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வரும் வியாழக்கிழமை பப்புகள் மற்றும் உணவகங்கள் போன்றவைகளின் நேரம் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இரவு 10 மணியுடன் கடைகள் மூடப்படும் என்ற விதி அதில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பிரதமரின் நாளைய உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் லண்டன் மேயர் சாதிக் கான் லண்டன் மக்கள் முகக்கவசங்களை பொது இடத்தில் அணிய வேண்டும் எனவும், வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவர், பப்கள் திறப்பதற்கான நேரங்கள் மற்றும் திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்கின் போது மக்கள் கூடும் எண்களை கட்டுப்படுத்த விரும்புகிறார். சாதிக் கான் லண்டனுக்கான புதிய ஊரடங்கு திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார். ஆனால் அவற்றைச் செயல்படுத்த பிரதமர் அலுவலத்தில் இருந்து அனுமதி வேண்டும். மேயர் இன்று சபை தலைவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் அவசர கூட்டத்தை நடத்தினார். இதையடுத்து வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய பூட்டுதல் நடவடிக்கைகளாக புதிய லண்டன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அதில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைகளில் பப்கள் மற்றும் மதுக்கடைகளுக்கான திறப்பு நேரம் குறைக்கப்பட்டது. பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் முகக்கவசம் அணிவது இதில் அடங்கும். வழக்குகள் அதிகரிது வருவதால், முடிந்தவரை பொதுமக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் பொது போக்குவரத்தை தவிர்க்கும் படியும் மேயர் வலியுறுத்துகிறார்.

வைரஸ் பரவுவதை குறைப்பதற்கும், லண்டன் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் ஒரு புதிய லண்டன் திட்டத்தை ஒப்புக் கொள்ள அனைத்து கட்சிகளிலிருந்தும், உள்ளூராட்சி மன்றத் தலைவர்களையும் பொது சுகாதார நிபுணர்களையும் சந்தித்தேன். இதில் சில புதிய கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துமாறு நாங்கள் கூட்டாக அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வோம், நாளை காலை பிரதமருடன் இது குறித்து விவாதிக்கிறேன் என்று மேயர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!