மீண்டும் அராஜகம் புரிந்த சுமனரத்ன தேரர்; பகிரங்க கொலை மிரட்டலும் விடுத்தார்!

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் நேற்று (21) தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை சிறைப்பிடித்து அடாவடியில் ஈடுபட்ட சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

செங்கலடி – பன்குடாவெளி பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தின் ஒரு பகுதியை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அடையாளமிடாமல் விவசாயத்துக்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தே அம்பிட்டிய சுமனரத்தின தேரர் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அங்கிருந்த அதிகாரி ஒருவரை நோக்கி “உயர் அதிகாரிகளை வரச் சொல்லு. சிறைக்கு போனாலும் பரவாயில்லை கழுத்தை நெரிப்பேன். உங்களை அடித்துக் கொலை செய்வேன். உயிரிழக்கும் விதமாக அடிப்பேன்” என்று உயிர் அச்சுறுத்தல் விடுத்து, தாக்குதல் மேற்கொள்ளவும் முயன்றிருந்தார்.

அத்துடன் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை தகரக் கொட்டில் ஒன்றிற்குள் சிறைப்பிடித்து வைத்திருந்த தேரர், உயர் அதிகாரிகள் வரும் வரை அவர்களை விடமாட்டேன் என்று அடாவடியாக செயற்பட்டுள்ளார். இவ்வாறு சுமார் ஒரு மணி நேரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைப்பிடித்து வைத்த தேரர், சம்பவ இடத்திற்கு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மற்றும் பொலிஸார் உடன் வரவேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் அங்கு வந்து சமரசம் பேசிய பொலிஸ் அதிகாரியை அநாகரிகமாக திட்டிய தேரர் குழப்பத்தை தொடர்ந்ததுடன், ஒருவாரத்துக்குள் குறித்த பகுதியை தொல்பொருள் இடமாக அடையாளப்படுத்தி, வர்த்தமானி வெளியிடப்படும் என்று அங்குவந்த அதிகாரிகள் வாக்குறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!