மெக்சிகோவில் வளர்ப்பு நாய்களை தத்தெடுத்து கொடூர செயலில் ஈடுபட்டுவந்த இளம் தம்பதி!

மெக்சிகோ நாட்டில் அனாதையான வளர்ப்பு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி ஒன்று தங்கள் வளர்ப்பு பாம்புகளுக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மெக்சிகன் மாநிலமான அகுவாஸ்கலிண்டெஸ் பகுதியிலேயே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் Kevin Peralta de la Torre என்பவர் அடையாளம் காணப்பட்டு, தற்போது குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கெவின் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து சமூக ஊடகங்களில் கோரிக்கை வைப்பதாகவும், ஆதரவற்ற வளர்ப்பு நாய்களை தாங்கள் தத்தெடுக்க தயார் என கூறியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாய்களை கைப்பற்றிய பின்னர் இவர்கள், உரிமையாளர்களை சமூக ஊடகங்களில் இருந்து முடக்கி விடுவதாகவும், அதன் பின்னர் அவர்களுடன் தொடர்பு எதுவும் வைத்துக் கொள்வதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

கெவினுக்கு சொந்தமாக ஒரு பாம்பு பண்ணை உள்ளதாகவும், அதற்காகவே நாய்களை தத்தெடுப்பதாக கூறி ஏமாற்றி வாங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், 4 மாத காலத்தில் கெவினிடம் ஒப்படைத்த 11 நாய்கள் மாயமாகியுள்ளதாகவும் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருப்பினும் கெவின் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இல்லை எனவும், அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்பது மட்டுமே தற்போதைய தகவல் என உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!