சுனாமியின் காணாமல் போய் மீட்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன்! – மற்றொரு பெண் உரிமை கோருகிறார்.

சுனாமியின் போது காணாமல் போய் 16 வருடங்களுக்கு பின்னர் தமது பிள்ளையை கண்டறிந்துள்ளதாக சம்மாந்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் ஊடகங்களிடம் வெளியிட்ட கருத்து தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பிள்ளையை வளர்த்தாக கூறப்படும் அம்பாறை – புத்தங்கல பகுதியை சேர்ந்த நூரல் இன்சான் என்ற (42-வயது) பெண் எம்மாந்துறை பொலிஸில் முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண், சுனாமியின் போது காணமால் போன தனது மகனை 16 வருடங்களுக்கு பின்னர் கண்டறிந்துள்ளதாக அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

சம்மாந்துறை – மாளிகைக்காடு பகுதியில் சுனாமி தாக்கிய வேளை, 5 வயதாக இருந்த ராஸீன் மொஹமட் அக்ரம் ரிஸ்கான் என்ற தமது மகன் காணாமல் போனதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் தமது மகனை கண்டறிந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சிறுவன் மற்றும் புத்தங்கல பகுதியை சேர்ந்த பெண்ணும் இன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காகவே அவர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் குறித்த சிறுவன் காணாமல் போன தனது மகன் என கூறிய பெண்ணையும் நேற்று பொலிஸில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை உண்மையான தாய் யார் என உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் நாட்களில் மரபணு பரிசோதனை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ தரப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!