போருக்குப் பின்னர் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படவில்லையாம்!

மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படவில்லை என்று ஊடகத்துறை அமைச்சரும் ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கச்சேரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் குறித்தும் வெகுசன ஊடக அமைச்சரிடம் வினவப்பட்டது.

எனினும் இந்தக் கேள்விக்கும் அமைச்சர் மழுப்பான பதில்களை வழங்கியிருந்ததுடன், மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டார்.

“மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை நான் முற்றாக மறுக்கின்றேன். அவை யுத்தம் நடைபெற்ற சம்பவங்களாகும்.யுத்தத்தின் பின்னர் எந்தவொரு ஊடகவியலாளர்களும் மரணிக்கவில்லை.

யுத்தத்துடன் அவர்கள் தொடர்பு அற்றவர்கள் என்ற போதிலும் அவர்களும் தனிப்பட்ட நபர்களே. 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறவில்லை. எனக்குகூறுங்கள் எங்கு நடைபெற்றது என்பதை. 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து, இன்றும் கலந்துரையாடுகின்றோம்.

லசந்தவின் சம்பவம், ஏனைய அனைவர் தொடர்பான விடயங்கள் 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்றவை. ஆட்கொலை அல்லது காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தால், அவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும். சிங்கள சமூகம் சார்ந்தவர்களின் விசாரணைகளும் தாமதமடைகின்றன.

அவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதும் இடம்பெறுகின்றன. நீங்கள் கூறியதால் இங்கு நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகின்றேன். லசந்த மற்றும் ஏனைய சிலர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.அந்த ஐந்து வருடங்களில் அதனை நிறைவுசெய்ய முடியாவில்லை ஆயின் தொழில்நுட்ப பிரச்சினைகள் காணப்படுகின்றன. சாட்சி தொடர்பான பிரச்சினை இருக்கும்.சாட்சிகளை கண்டறிவதில் பிரச்சினைகள் இருக்கும். வடக்கு தெற்கு என்ற வேறுபாடு அதற்கு இல்லை.” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!