வடக்கு மக்களுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விடுக்கும் வேண்டுகோள்!

தற்போதுள்ள கொரோனா சமூக தொற்று நிலை தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ண அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

“வடக்கில் இரண்டு விதமான அபாயங்கள் காணப்படுகின்றன. இந்திய மீனவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர் ஊடாக வடக்கு மாகாணத்தில் கொரோனா பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றன. அதேபோல் வடக்கு மாகாணத்திற்கு ஏனைய மாகாணங்களில் இருந்து வருபவர்களிலிருந்து வடக்கு மாகாண மக்களுக்கு கொரோனா தொற்றக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

எனவே இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுங்கள். குறிப்பாக நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயமாகமுக கவசத்தை அணிந்து செல்லுங்கள். ஏற்கனவே சுகாதார அமைச்சினால் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நீங்கள் இந்த விடயங்களை கடைபிடித்தீர்கள். அந்த நடைமுறைகளை கடைப்பிடித்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று ஏற்படா வண்ணம் பாதுகாக்க வேண்டியது வடக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

பொது இடங்களில் ஒன்றுகூடாதீர்கள் அனாவசியமாக வீதிகளில் பயணிப்பதைத் தவிருங்கள் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் பாதுகாப்பதற்கு அனைத்து வடக்கு மாகாண மக்களும் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!