பிரியங்கா காந்தியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட போலீஸ்: காரணம் இதுதான்!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கி சென்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை போலீசார் திருப்பி அனுப்பினர். ராகுல் காந்தியை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளினர்.

பிரியங்கா காந்தியையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். காவல்துறையின் இந்த செயலைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பின்னர், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று முன் தினம் மீண்டும் ஹத்ராஸ் சென்றனர். அவர்களுடன் காங்கிரஸ் எம்பிக்களும் ஹத்ராஸ் நோக்கி புறப்பட்டனர். அவர்களை டெல்லி-நொய்டா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், ராகுல் காந்தி மற்றும் 4 நிர்வாகிகள் மட்டும் ஹத்ராஸ் செல்ல நொய்டா போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், தங்களுடன் வந்த அனைத்து நிர்வாகிகளையும் ஹத்ராஸ் நோக்கி செல்ல அனுமதிக்கும்படி ராகுல், பிரியங்கா போராட்டம் நடத்தினர். போலீசாரு க்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னேறாமல் போலீசார் தடுத்தனர். அதன்பின்னர் போலீசாரின் அனுமதி அளித்தபடி ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேர், ஹத்ராஸ் சென்று பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

முன்னதாக, டெல்லி-நொய்டா எல்லையில் நடந்த களேபரத்தின்போது, ஆண் காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து தடுத்து நிறுத்தியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய கட்சியின் முக்கிய பெண் தலைவரிடமே போலீஸ் இவ்வாறு நடந்து கொள்ளும் என்றால், எளிய மக்களிடம் எத்தகைய கடுமையான போக்கை கையாளும் என சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவிப்பதாக நொய்டா போலீசார் தெரிவித்துள்ளார். மேலும், பிரியாங்கா காந்தியிடம் மன்னிப்பு கோருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நொய்டா மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “ பெண்களின் பாதுகாப்பு, கண்ணியத்தை உறுதி செய்வதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நடந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!