பிரித்தானியாவில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தமிழ் குடும்பம்!

பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் 3 வயது சிறுவனுடன் பெற்றோரும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலேயே காரசார விவாதங்களுக்கு பின்னர் கொலை மற்றும் தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்கம்பக்கத்தினரின் தகவலின் அடிப்படையில் நள்ளிரவு 1 மணியளவில் குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பொலிசார் 3 வயதான கைலாஷ் குகராஜ் மற்றும் அவரது தாயாரான 36 வயது பூர்ண காமேஷ் சிவராஜ் ஆகியோரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

இதில் 42 வயதான குகராஜ் சிதம்பரநாதன் என்பவர் கத்திக்குத்து காயங்களுடன் குற்றுயிராக காணப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சம்பவயிடத்திலேயே பலியானதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இவர்களுடன் வளர்ப்பு நாய் ஒன்றும் கொல்லப்பட்ட நிலையில் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மலேசிய தமிழர்களான இந்த தம்பதி, அக்கம்பக்கத்தினருடன் மிக நெருக்கமாக பழகியதாகவும், சிறந்த குடும்பமாக விளங்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவ்வப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பல நாள் நள்ளிரவு தாண்டியும் இவர்களின் அலறல் சத்தம் கேட்டதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட பூர்னாவின் உறவினர் ஒருவரே ஞாயிறன்று பொலிசாரின் உதவியை நாடி, கடந்த ஒரு மாத காலமாக பூர்னா தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார், பூர்னாவின் குடியிருப்புக்கு பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் எந்த பதிலும் கிடைக்காத நிலையில், பொலிசார் வலுக்கட்டாயமாக குடியிருப்புக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதாக கூற முடியாது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ள பொலிசார், இவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் தகவல் அறிவிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் கூடிய விரைவில் மூவரின் உடற்கூராய்வும் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!