வங்கி ஊழியர்களுக்கு தொற்றியதா கொரோனா? இழுத்து மூடப்பட்டது இலங்கை வங்கி கிளை

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் யுவதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவரைச் சந்தித்த தந்தை வங்கிக்கு சென்றமை கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து அந்த வங்கி கிளை இன்றையதினம் இழுத்து மூடப்பட்டது.

பொல்பிதிகமவில் உள்ள இலங்கை வங்கி கிளையே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மினுவாங்கொடவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் தமது மகளை அவரது தாயும் தந்தையும் கடந்த வியாழக்கிழமை கம்பஹாவில் சந்தித்துள்ளனர்.

எனினும் பின்னர் நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரது தாயாரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார், அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் யுவதியின் தந்தை திங்கள்கிழமை (5) மதியம் 2 மணிக்கு கைது செய்யப்பட்டார். அவர் மதியம் 12.30 மணியளவில் பொல்பிதிகமவில் உள்ள இலங்கை வங்கி கிளைக்கு சென்றிருந்தார்.அவருக்கும் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பொல்பிதிகமவில் உள்ள இலங்கை வங்கி கிளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மூடப்பட்டதாகவும், ஊழியர்களை சுய தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!