யாழ் மாவட்டம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அபாயம் உள்ளது! – அரச அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒருவருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

யாழ் மாவட்டம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் இன்னும் அபாயமான ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. எனவே அனைவரும் ஒருங்கிணைந்து முற்பாதுகாப்பு நடவடிக்கையினை எடுப்பது மிக கட்டாயமானதாகும்.

இப்போதுவரை சுமார் 411 குடும்பங்களைச் சேர்ந்த 868 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். புங்குடுதீவில் சுமார் 127 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். புங்குடுதீவில் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

வெளியூரில் இருந்து வருகை தந்து இங்கே தொழில் புரிகின்றவர்களை இனங்கண்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரத் திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளார்கள். அதிகம் தொற்றுள்ள கம்பஹா மாவட்டம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து கடமையாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிசோதனைகளை நாங்கள் மேற்கொள்வதாக தீர்மானித்துள்ளோம்.

அத்தோடு வடக்கு மாகாண ஆளுநர் ஒரு அறிவுறுத்தலினை வெளியிட்டுள்ளார். மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அதாவது மேல் மாகாணத்திலிருந்து இரு வாரங்களுக்குள் வருகை தந்தோர் தொடர்பான விவரங்களை சேகரித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

எனவே அவ்வாறு வருகை தந்தவர்கள், சுயமாக தங்களுடைய பதிவுகளை வைத்திய அதிகாரி பிரிவுகளில் வழங்க வேண்டும். அதேபோல் பிரதேச செயலர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தங்களுடைய பிரதேசங்களில் இரண்டு வாரங்களுக்குட்பட்ட பகுதியில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தோரின் பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!