வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை!

வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸாரால், தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகத்தினரை வவுனியா நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு உரிமை கோரும் தொல்பொருள் திணைக்களம், ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்குத் தடைவிதித்தது. கடந்தவாரம் ஆலயத்தின் பூசகரை நெடுங்கேணி பொலிஸார் விசாரணைக்காக அழைத்து ஆலய வளாகத்திற்குள் சென்று பூசை நிகழ்வுகளை மேற்கொண்டால் கைது செய்வோம் என தெரிவித்திருந்தனர்.

அத்துடன், தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு வவுனியா நீதிமன்றில் நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரை கைதுசெய்ய வேண்டும் என்றும் தொல்பொருள் சார்ந்த விடயம் என்பதால் வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை ஆலய நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைக்கவேண்டும் எனவும் நீதிவானிடம் கோரினர்.

ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ருவன் வெலிசாய போன்ற பல்வேறு பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழேயே இருந்தாலும், அங்கு வழிபாடுகள் இடம்பெறுவதை அவர்கள் நீதவானுக்கு சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் ஆலய நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!