தனிமை மையத்தில் மூவருக்கு தொற்று; வவு. வைத்தியசாலை பிரிவு முடக்கம்!

வவுனியா – பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் கம்பஹாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமையால் வைத்தியசாலையில் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரி கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக அண்மையில் மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் குறித்த மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனையடுத்து, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள 324 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவர்களில் மூன்று பேருக்கு கோரோனோ தொற்று உள்ளமை பரிசோதனை முடிவுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் மூவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் வெலிகந்த கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயில் இன்றையதினம் காலை மூடப்பட்டு, வெளி நோயாளர் பகுதி உட்பட பல்வேறு பகுதிகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

மேலும் இன்று காலை ஊழியர்கள் செல்லும் வாயிலின் ஊடாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!