அரசியல்வாதிகளின் தொடர்புகளை மறைக்கவே மாகந்துரே மதுஷ் கொலை!

மாகந்துரே மதுஷுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர்கள் அவரது கொலை மூலம் மறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதுஷ் காலை சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தனர்.

அவருடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 80 அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல்வாதிகளின் பெயர்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்வதைத் தடுப்பதற்காக அவர் படுகொலை செய்யப்பட்டார் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மாகந்துரே மதுஷூக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தால், தொடர்புடைய அனைத்து பெயர்களும் வெளிப்பட்டிருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோ கிராம் ஹெரோயின் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மாகந்துரே மதூஷை அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இதன்போது பொலிஸாருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மாகந்துர மதுஷ் உயிரிழந்ததுடன், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!