“20” உங்களையே திருப்பித் தாக்கும்!

20 வது திருத்தச்சட்டம் ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது என்று தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் 20 ஆவது திருத்தசட்ட மூலம் மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அவர்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து, இரும்புக் கரம் கொண்டு நசுக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி திட்டமும் 20 ஆவது திருத்த சட்டத்தின் பின்னால் இருப்பதாக உணர முடிகிறது.

“மனித நாகரிகம் முன்னேற முன்னேற எவ்வாறு ஜனநாயக பண்புகளை மேலும் மேம்படுத்தி மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் சகவாழ்வுடன் கூடிய வாழ்க்கையினை ஏற்படுத்தலாம் என்று உலக நாடுகள் சிந்தித்து செயற்பட்டு வரும் இந்தவேளையில், ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்து நல்லாட்சிக்குரிய பண்புகளை குழிதோண்டி புதைக்கும் விசித்திரம் இந்த நாட்டில் இடம்பெறுகின்றது.

யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும்.

இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த சட்ட திருத்தும், உங்கள் மீதும், உங்கள் பிள்ளைகள் மற்றும் எதிர்கால உங்கள் சந்ததியினர் மீதும் ஒரு பூமராங் போல மாறும்.

உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்தாதீர்கள். இரண்டு தரப்பிலும் உள்ளவர்கள் 20 ஆவது சட்ட திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட அனுமதிக்கக் கூடாது.

மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுக்க வேண்டும்.” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!