இராணுவத் தளபதிக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் சஜித்!

இராணுவத்தினரையும் நாட்டையும் கடந்த அரசாங்கம் மனிதவுரிமைகள் பேரவையில் காட்டிக்கொடுத்த போது மௌனியாகவிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீக்குவதற்கான கோரிக்கை முன்வைக்குமாறு கூறுவது வேடிக்கையாதென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைய நீக்கும் கோரிக்கையை இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலரிடம் முன்வைக்குமாறு வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத் தடை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 24 மணித்தியாலங்களுக்குள் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்தத் தடை நீதியானதல்ல அறிவித்ததுடன், தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கூறினோம். அத்துடன், இதுதொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கும் உரிய அறிவிப்பை விடுத்திருந்தோம்.

கடந்த அரசாங்கம் ஜெனிவா மனிதவுரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி நாட்டையும் எமது இராணுவத்தையும் காட்டிக்கொடுத்தமையால்தான் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!