மினுவாங்கொடையில் கொரோனா தொற்று குறித்த தற்போதைய நிலவரம்!

மினுவாங்கொடை சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளங் காணப்படவில்லை என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் மிஹார தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி மக்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நேற்றைய நிலவரப்படி கம்பஹா மாவட்டத்தில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைகளுக்காக திவுலபிட்டிய, ரதாவான, தொம்பே மற்றும் மினுவாங்கொடை ஆகிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை விமானப்படை யினரால் கம்பஹா மாவட்டத்தின் யக்கல மற்றும் அத்தனகல ஆகிய பகுதிகளில் இராணுவ வைத்தியசாலைகளை நிர்மாணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் சீதுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் அடையாளம் காணப்பட்ட 30 கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் அந்தப்பகுதியில் உள்ள மீன்பிடி நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என சீதுவ பொது சுகாதார பரிசோதகர் சுரேஷ் குமார தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!