செயற்கைத் தீவு சீன நிறுவனத்துக்கு வழங்கப்படாது – மகிந்த சமரசிங்க

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படையே உறுதிப்படுத்தும் என்றும், அதற்காக, துறைமுகப் பகுதியில் புதிதாக அலைதாங்கி தடுப்புகள் அமைக்கப்படும் என்றும் சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“அம்பாந்தோட்டை ஒட்டியுள்ள செயற்கைத் தீவு, சீனாவிடம் கையளிக்கப்படமாட்டாது.

அம்பாந்தோட்டை துறைமுகம், கைத்தொழில் வலயம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வரும் பிரதேசத்தின் பாதுகாப்பு முழுமையாக சிறிலங்கா கடற்படையினால் கையாளப்படும்.

சிறிலங்கா கடற்படையினால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் புதிதாக அலை தாங்கி தடுப்பு அமைக்கப்படும்.

கடந்த ஆண்டு சீன நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டில், செயற்கைத் தீவை சீன நிறுவனத்திடம் கையளிக்க வேண்டும் என்ற எந்தக் குறிப்பும் இடம்பெற்றிருக்கவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான கடைசிக் கட்ட கொடுப்பனவு, 12 நாட்கள் தாமதமாகவே, வைப்பிலிடப்பட்டுள்ளது. துறைமுகத்துக்கு அருகில் உள்ள தீவு விவகாரத்தினால் இந்த தாமதம் ஏற்படவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வரும் நிலப்பரப்பு தொடர்பான சிறு சிறு பிரச்சினைகளை இரண்டு நிறுவனங்களும் தீர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.

செயற்கைத் தீவு தொடர்ந்தும், துறைமுக அதிகாரசபையிடமே இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!