புதிய கொரோனா பரிசோதனை முறையை மாற்று வழியாக கருத முடியாது : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

PCR பரிசோதனைக்கான மாற்று பரிசோதனை நடவடிக்கையாக Rapid Antigen Test ஐ கருத முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள Rapid Antigen Test குறித்து தற்போது அனைவரும் பேசுகின்றனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இந்த பரிசோதனை அத்தியாவசியமானது என நாம் கருதுகிறோம்.

ஆனால் இந்த பரிசோதனை குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி இதுதான் என சிலர் காண்பிக்க முயற்சிக்கின்றனர்.

அது உண்மை அல்ல. மக்களின் பொறுப்பு மற்றும் நடத்தை ஆகியனவே இங்கு முக்கியம் பெறுகின்றது. ஆனால் தொற்றைக் கண்டறிவதற்காக PCR பரிசோதனையுடன் இணைந்து இதனை முன்னெடுக்க முடியும்.

எனினும் PCR பரிசோதனைக்கான மாற்று வழியாக இதனைக் கருத முடியாது. ஒரு சிலர் PCR பரிசோதனைக்கு பதிலாக Rapid Antigen Test ஐ பயன்படுத்த முடியும் என்ற கருத்தை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சிக்கின்றனர்.

இந்த Rapid Antigen Test இல் Positive ஆக வேண்டுமென்றால் எமது உடலில் அதிக அளவிலான வைரஸ் காணப்பட வேண்டும். ஆகவே உண்மையில் கொரோனா தொற்று உள்ள நபர்கள் Rapid Antigen Test மூலம் Positive ஆக அடையாளம் காணப்படாது போகக் கூடும்.

அத்துடன், கொரோனா தொற்று வேகமாகப் பரவக் கூடிய இடங்களில் Rapid Antigen Test ஐ பயன்படுத்த முடியும்.

Rapid Antigen Test ஐ மேற்கொண்டால் உண்மையான நோயாளர்களில் 50 வீதமானோருக்கு மாத்திரமே Positive என முடிவு கிடைக்கும்.

இது மிகவும் விலை மலிவான ஒரு பரிசோதனை. இதன் மூலம் 15 நிமிடம் அளவிலான குறைந்த நேரத்தில் முடிவுகளை பெறலாம். வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது போன்ற பாரிய அளவிலானோர் காணப்படுகின்ற, சுகாதார வசதிகள் குறைவாக காணப்படுகின்ற, வேகமாக தொற்று பரவக் கூடிய இடங்களில் மேற்கொள்ளக் கூடிய பரிசோதனையே இந்த Rapid Antigen Test ஆகும்.

இது போன்ற பகுதிகளில் PCR செய்வதை விட இது சிறந்தது. அதன்போது தொற்றுக்குள்ளானோரை அடையாளம் காணமுடியும். எனினும், Rapid Antigen Test மூலம் தொற்றுக்குள்ளாகவில்லை என அடையாளப்படுத்தப்படுவோரை கண்டுகொள்ளாமல் விடமுடியாது.

Rapid Antigen Test மூலம் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் எஞ்சியோருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். PCR மற்றும் Rapid Antigen Test ஆகியவற்றைப் போன்றே காணப்படும் Anti Body Test குறித்தும் அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் நாம் கோரிக்கை விடுக்கிறோம்” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!