பெண்களின் அனுமதியின்றி அவர்களின் கருப்பையை நீக்கிய அமெரிக்க மருத்துவர்!

அமெரிக்காவில் நோயாளிகளுக்குத் தேவையற்ற அறுவை சிகிச்சைகள் செய்த குற்றத்திற்காக மருத்துவருக்கு 465 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம், செசபீக்கைச் சேர்ந்த மருத்துவர் ஜாவித் பெர்வைஸ். மகளிர் மருத்துவ நிபுணரான இவர் கர்ப்பிணி நோயாளிகளைப் பிரசவ காலத்துக்கு முன்கூட்டியே தூண்டி அறுவை செய்துள்ளார்.

அதேபோன்று நிரந்தர கருத்தடைகளுக்கு 30 நாள் காத்திருப்பு காலங்களை மீறியுள்ளார். சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் புற்றுநோய் வராமல் இருக்க அறுவை சிகிச்சை அவசியம் எனக் கூறி அறுவை சிகிச்சை செய்ததோடு அவர்களிடம் இருந்து பணத்தையும் கறந்துள்ளார்.

பெர்வைஸ் கடந்த 10 ஆண்டுக் காலத்தில், தன்னிடம் சிகிச்சை பெற்ற 41.26% நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார், ஆனால் ஒரு சராசரி மருத்துவர் வெறும் 7.63% நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சைகள் செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர் ஜாவித் பெர்வைஸ் தனது நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியாகத் தேவையற்ற அறுவை சிகிச்சைகள் செய்வதாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பல வழக்குகள் கருப்பை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பானவை.

இந்த தகவல் வெளிவந்த நிலையில் நோயாளிகள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இந்த வழக்கில் மருத்துவர் ஜாவித் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு 465 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது.

அடுத்தாண்டு மார்ச் மாதம் தான் அவருக்கான அதிகாரபூர்வ தண்டனை விபரம் வெளியிடப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!