ஆபாச விளம்பரங்களுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராஜா என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: “தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் ஆபாசத்தைப் பரப்பும் விதமாக அமைந்துள்ளன. இத்தகைய விளம்பரங்களுக்கு தணிக்கை எதுவும் இல்லை.

இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதோடு, பல இளம்பருவத்தினர் குற்றவாளிகளாக மாறும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற விளம்பரங்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதனை மீறி ஒளிபரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் ஆபாசத்தைப் பரப்பும் வகையில் இருந்தால் அவற்றை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!