தீபாவளி கொண்டாட்டத்துக்கு விதிமுறைகள்!

எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தீபாவளியை முன்னிட்டு, கோவில், சமூகம், பெருந்தோட்டம் ஆகிய எந்தப் பகுதிகளிலும், விழாக்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தீபாவளியை எவ்வாறு கொண்டாடவேண்டும் என்பது தொடர்பாக, இந்து மதத்தவர்கள், மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அனைவருக்கும் அறிவிக்கும் வகையில், சுகாதார அமைச்சு, சுகாதார வலிமுறைகள் உள்ளடங்கிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு கொண்டாட்டம் கொண்டு வரும் நல்ல உணர்வுகளைப் பாதுகாக்க, இந்தக் கொண்டாட்ட காலத்தில், எந்தவொரு இந்து பக்தருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை, பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என, அமைச்சின் செயலாளர் விராஜ் அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா, களுத்தறை போன்ற ஆபத்தான பகுதிகளில் உள்ளவர்கள், தங்களது அன்புக்குரியவர்களுக்கு தொற்று பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், நாட்டின் அனைத்து பகுதிகளிலும், எந்தவொரு பகுதிக்கும் சுற்றுலா செல்லாமல், வீட்டுக்குள்ளேயே தீபாவளி கொண்டாடப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மிக முக்கியமாக, சனிடைஸரை (கிருமியளிப்பதற்காக கைக்கழுவும் திரவம்) பயன்படுத்திய பின்னர், விளக்கு ஏற்றுவதையோ அல்லது நெருப்புடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு செயலையே செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தங்கள் அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் அலைபேசியில் வாழ்த்து கூறுமாறும், வீட்டுக்கு விருந்தினர்களாக வருமாறு யாரையும் அழைக்க வேண்டாம் என்றும் கைக்குழுக்கி வாழ்த்து தெரித்தல், கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தல் போன்றவற்றை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளது.

இவையனைத்துக்கும் மேலாக, மதுபானம், புகைத்தல் உபசாரங்களை முன்னெடுக்கவேண்டாம் என்றும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்து.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!