கொரோனா கொத்தணி குறித்து கொரோனா தடுப்பு செயலணி விடுத்துள்ள விசேட அறிக்கை!

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை ஆகிய கொரோனா கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட 7 ஆயிரத்து 606 தொற்றாளர்கள் தற்போதைய நிலையில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விசேட செயலணி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை ஆகிய கொரோனா கொத்தணிகளில் இதுவரை 12 ஆயிரத்து 695 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அதில் மேலும், 5 ஆயிரத்து 89 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மேலும், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த 81 பேர் தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வருகின்றது.

இதேவேளை, முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் 31 தனிமைப்படுத்தல் முகாம்களில் 2 ஆயிரத்து 956 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 468 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த 468 பேரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 ஆயிரத்து 671 PCR பரிசோதனைகள் முன்னெடுக்க்பட்டுள்ளன.

நாட்டில் ஒரே நாளில் முன்னெடுக்கபட்ட அதிக அளவிளான PCR பரிசோதனைகளாக இது காணப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 378 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!